பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
01:04
திருப்பரங்குன்றம், : தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமாக நடந்துவரும் திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம், விளக்கு பூஜை நடந்தது. கிராமத்தினர், விவசாயிகள் நேற்று காலை தங்களது குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில் பூ சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து, மலையை சுற்றிவந்து நான்கு ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றம் கோயில் நிலங்களை உழுதனர்.
கல்வெட்டு குகை கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டம், விவசாயம், தொழில்களுக்கான கூலி நிர்ணயம் குறித்து ஆலோசனை நடத்தினர். இரவு கிராமத்தினர் சார்பில் கோயிலில் பூஜை நடந்தது. விவசாயம் செழிக்கவும் மக்கள் நலம் பெற வேண்டி ஆண்டாண்டு காலமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனுக்ஞை பூஜை, மகா கணபதி மூல மந்தர ஹோமம், மூலவர் விநாயகருக்கு தலா 108 லிட்டர் பால், இளநீர், சங்காபிஷே கம், கலசாபிஷே கம் நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம் முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியானது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து விளக்கு பூஜை நடந்தது. தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது.