பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
01:04
சென்னை:அனைவரும் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு, பஞ்சேந்திரியங்களை நல்விதமாக பயன்படுத்தி, விஞ்ஞானத்தை சேர்த்து, சீரும் சிறப்புமாக வாழ வேண்டும், என, தமிழ் பிலவ புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாசி வழங்கி உள்ளார்.
அவரது அருளாசி:உலகில் மிகப் பழமையான, பரந்த மனப்பான்மை கொண்டது இந்திய கலாசாரம். இது, அமைதியாகவும், வளமாகவும், நல்லவர்களாகவும் வாழ்ந்து, பிறருக்கு உதவி செய்யும் மனம், சக்தி படைத்தவர்களாக மனிதர்களை உருவாக்குகிறது.மனித வாழ்க்கைக்கு தர்மமும், கலாசாரமும் மிக முக்கியம். மனித மனதை துாய்மைப்படுத்தி, நல்ல சிந்தனையை வளர்ப்பதன் வாயிலாக, நல்ல சமுதாயம் உருவாக, தர்ம சிந்தனை பேருதவி புரிகிறது.
தர்மத்தை வளர்க்க, அறம் செய விரும்பு என, முன்னோர் உபதேசித்துள்ளனர். தர்மத்தை காலம் அறிந்து செய்வதன் வாயிலாக புண்ணியம் பெற முடியும்.அந்த காலங்களை தெரிந்து கொள்ள பஞ்சாங்கம் இருந்து வருகிறது. புதிய ஆண்டில், புதிய பஞ்சாங்கம் படித்து, நல்ல நேரங்களை தெரிந்து, நவக்கிரஹ தெய்வங்களின் அருளோடு, நாம் நல்ல பலன்களை பெற வேண்டும். நம் கலாசாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தேச, தெய்வ பத்தியோடு, சமுதாய சேவை மனப்பான்மை வளர வேண்டும்.இந்த பிலவ ஆண்டில், அனைவரும் கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பஞ்சேந்திரியங்களை நல்லவிதமாக உபயோகப்படுத்தி, விஞ்ஞானத்தை சேர்த்து, சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். கலைகள் மனதை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப் பட்டவை. தேவாரம், பிரபந்தம், நீதி நுால்கள், சித்தர் பாடல்கள், சங்கீதம் ஆகியவற்றை கற்று, மனம் சஞ்சலப்படாமல், நல்ல விஷயங்களை சிந்திக்க வேண்டும்.இவ்வாறு விஜயேந்திரர் அருளாசி வழங்கி உள்ளார்.