பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
05:04
பொள்ளாச்சி: சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
சித்திரை மாதம், 1ம் தேதியான நேற்று, தமிழ் புத்தாண்டு பிறந்தது. பொள்ளாச்சி பகுதியில், சித்திரை பிறப்பு, சித்திரை கனி விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்காக, கோவில்களில் சுவாமிகளுக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், அரச மரத்து விநாயகர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில்களில், புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், குடும்பம் சகிதமாக கோவில்களுக்கு வந்து வழிபட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக சென்று வழிபட வேண்டும், என, கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.சில கோவில்களில், பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி அனுமதித்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், புத்தாண்டை மங்களகரமாக துவக்க வேண்டி, மக்கள் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனைமலைஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆனைமலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட, ஒன்பது வகையான அபிஷேகம் நடந்தது.மேலும், வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்பட பழங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டன.
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ராஜஅலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. - நிருபர் குழு -