திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவம் துவங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோற்ஸவம் கொண்டாடப்படும். தினசரி இரவு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 10 ம்திருநாளில் சித்திரைத் தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் இன்றி சம்பிரதாயமாக வைகானாச ஆகம விதிகளின்படி பிரமோற்ஸவம் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி தேரோட்டம், திருவீதி உலா நடைபெறாது. நேற்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் துவங்கின. இன்று காலை 8:00 மணிக்கு பெருமாள் கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடிபட்டம் தென்னமரத்து வீதி பிரகார வலம்வந்து கொடிமரத்திற்கு வந்தது. தொடர்ந்து 11:30 மணிக்கு கொடியேற்றம் நடந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார். மாலையில் காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. பெருமாள், ஸ்ரீதேவிபூதேவியருடன் பிரகாரம் வலம் வந்தனர்.