ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, வருவாய் இன்றி தவித்த மீனவர்கள் தேடி எடுத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்யும் பக்தர்கள், நேர்த்தி கடனாக அக்னி கடலில் நாணயம், சுவாமி, அம்மன் மற்றும் நாகம் வடிவில் செய்த தங்கம், வெள்ளி தகடுகளை காணிக்கையாக செலுத்தி புனித நீராடுவார்கள். இக்காணிக்கையை கோயில் நிர்வாகம் எடுப்பதில்லை. இதனை 61 நாள்கள் மீன்பிடிக்க தடையால், வருவாய் இன்றி தவிக்கும் இப்பகுதி மீனவர்கள் சிலர் முகத்தில் கடல்நீர் புகாதபடி பிரத்தியோக கண்ணாடி அணிந்து கொண்டு அக்னி கடலில் மூழ்கி காணிக்கை தேடி எடுக்கின்றனர். இதில் அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு சிலருக்கு தங்கம், வெள்ளி தகடும், இல்லாவிடில் வெறும் நாணயம் மட்டுமே கிடைக்கும். வேலை இன்றி வீடுகளில் முடங்குவதை விட குடும்ப செலவுக்கு இந்த காணிக்கை தேடும் பணியில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.