பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
05:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில், நடப்பாண்டு நடைபெற இருந்த, சித்ரா பவுர்ணமி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. ராமானுஜர் வருகை தந்த கோவில் என பெயர் பெற்ற இங்கு, ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, 10 நாட்கள் தேரோட்ட உற்சவம் நடைபெறும். சித்ரா பவுர்ணமி திருநாளில் மாலை தேரோட்டமும், அதை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும். இதில், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோயில்களில், திருவிழாக்கள் நடத்த, தமிழக அரசு தடை விதித்தது. இதையொட்டி இந்த ஆண்டு ஏப்., 26ம் தேதி நடைபெற இருந்த, பாலமலை ரங்கநாதர் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலில் அர்ச்சகர் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்துவார். இதில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தெரிவித்தார். கடந்த ஆண்டும், தொற்று பரவல் காரணமாக, இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.