பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
08:04
விருத்தாசலம்: கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவில்மின்னொளியில் ஜொலிக்கிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அதுபோல், ஐந்து தேர்கள், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம் எனசிறப்புகளை கொண்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கோபுரங்கள், சுற்றுச்சுவர், வளாகம், கொடிமரம், சுவாமி சன்னதிகள் என தொல்லியல் ஆராய்ச்சித்துறை அனுமதியுடன், பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகிறது.திருப்பணிகள் நிறைவடைந்த கோபுரங்கள், சுற்றுச்சுவர், பிரகாரம்என அனைத்து பகுதிகளிலும் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாலை 6:00 மணிக்கு மேல், அதிகாலை வரை விளக்குகளால் கோவில் வளாகம் மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.