பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
10:04
திருப்பூர் கிருஷ்ணன்
அன்று காஞ்சி மகாபெரியவரின் முன் பக்தர்கள் கூடியிருந்தனர். ஒவ்வொருவராக அவரவர் மனதில் எழுந்த சந்தேகங்களை பெரியவரிடம் கேட்க, அவரும் விளக்கிக் கொண்டிருந்தார்.
‘‘பூமியில் பிறந்த அனைவரும் தான் ஒருநாள் காலமாகிறார்கள். இதில் மெய்ஞ்ஞானிகள் முக்தி அடைவது என்பது எந்த வகையில் வித்தியாசமானது?’’ எனக் கேட்டார் அன்பர் ஒருவர். கனிவுடன் பார்த்த மகாபெரியவர் ஆர்வமுடன் விடை சொல்லத் தொடங்கினார்:
‘‘முக்தி அடைவது என்றால் என்ன? பந்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.
‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’’ என்கிறார் திருவள்ளுவர்.
பற்றினை விட விரும்பினால் கடவுளின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். பற்றிலிருந்து மனிதன் எப்படி விடுபட வேண்டும் என்பதை விளக்குகிறது சிவனைப் போற்றும் ‘மிருத்யுஞ்சய மந்திரம்’. நம்மை பற்றியிருக்கும் பந்தங்களில் இருந்து ‘உர்வாருகம்’ போல விடுபட வேண்டும் என்கிறது.
உர்வாருகம் என்பது வெள்ளரிப் பழம். வெள்ளரிப் பழம் போல விடுபட வேண்டும் என்றால் என்ன? மற்ற பழங்களுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அது முற்றிக் கனிந்த பிறகும் மற்ற பழங்கள் போல மரத்தில் இருந்து விழுவதில்லை. ஏனெனில் அது காய்ப்பது பழுப்பது எல்லாம் கொடியில் தான். அதையும் பந்தலிட்டுப் படர விட மாட்டார்கள். தரையோடு தரையாகத்தான் படரும்.
வெள்ளரிக்காய் பழமாகக் கனிவது தரை மட்டத்தில் தான். உயரத்தில் கிளையிலோ, பந்தலிலோ இல்லை. முற்றியதும் காம்பு தானாகவே இற்றுப் போய் விடும்.
ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஆனால் கொடி மட்டும் படர்ந்து கொண்டே போகும். அப்போது பழம் எந்த கிளை, காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் பழத்தை விட்டு விலகியதே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற காரியத்தைப் பண்ணவே இல்லை. இதே போல பழுத்த ஞானியும் இருந்த இடத்தில் இருந்தபடி தானிருப்பான். வெளியிலே காரியம் பண்ணினாலும் மனதிற்குள் சலனமே இருக்காது. பந்தங்களிலிருந்து அவன் விடுபட மாட்டான். ஆனால் பந்தங்கள் தானாக அவனை விட்டு போய்விடும். வெள்ளரிப் பழம் இருந்த இடத்திலேயே இருப்பது போல அவனும் எந்த இடத்தில் இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தனாக இருந்து கொண்டிருப்பான். அவ்வளவுதான்’’ என்று சொல்லி கலகலவெனச் சிரித்தார் மகாபெரியவர்.
அவர் தன்னைப் பற்றித் தான் சொல்கிறாரோ என்ற பிரமிப்புடன் அங்கிருந்த பக்தர்கள் பார்த்தனர்.