பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
10:04
அழகர்கோவில்: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் ஏப்.,27 ல் நடத்தப்படுகிறது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது.இந்தாண்டும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை(ஏப்.,23) துவங்கி மே 2 வரை கோயில் வளாகத்தில் நடக்கிறது.
ஏப்.,26 கள்ளழகர் அலங்காரத்தில் எதிர்சேவை காலை 9:15 மணி முதல் 10:00 மணி வரை நடக்கிறது. ஏப்.,27ல் ஆண்டாள் மாலை சாற்றுதல் முடிந்த பின், ஆடி வீதியில் காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடக்கிறது. ஏப்.,28 காலை 7:00 மணிக்கு பத்தி உலாத்துதல், காலை 10:30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு நடக்கிறது. ஏப்.,29 காலை 10:00 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், ஏப்.,30 இரவு பூப்பல்லாக்கு நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்கான வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகர் அருள்பாலிப்பர். பூஜை நேரம், வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சவோ, திரி எடுக்கவோ அனுமதி இல்லை. தீர்த்தம், அர்ச்சனை, மரியாதை, மாலை சாற்றுதல் கிடையாது. முகக்கவசம் அணியாதோருக்கு கோயிலுக்குள் அனுமதியில்லை.நிகழ்ச்சிகளை எல்.இ.டி., திரை மூலம் கோயில் பகுதிகள், தல்லாகுளம், வண்டியூர் கோயில் முன் பக்தர்கள் காணலாம். தவிர www.tnhrce.gov.in,www.alagarkovil.org, youtube Arulmigu Kallalagar Thirukkoil, algarkoil, youtube temple live streaming மூலமாகவும் காணலாம். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் அனிதா செய்து வருகின்றனர்.