பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
03:04
புதுச்சேரி; பஞ்ஜவடீ பஞ்ஜமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு, பாலாபிஷேகத்துடன் கூடிய திருமஞ்சனம் நேற்று நடந்தது.புதுச்சேரி - திண்டிவனம் சாலை, பஞ்ஜவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி அருள்பாலித்து வருகின்றனர்.இக்கோவிலில் சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன், அனுமன் மற்றும் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு, பஞ்சமுக ஜெயமாருதிசேவா டிராஸ்ட் மூலம், கடந்த 17ம் தேதி முதல் ராம நவமி உற்சவம் துவங்கியது.அதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று உலகை விட்டு விலகவும், உலக மக்கள் நலன் பெற கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை லட்ச்சார்ச்சனை நடந்தது. 19 மற்றும் 21ம் தேதி காலை வரை, வழக்கமான ஹோமங்கள், கோவில் பட்டாச்சாரியர்கள் மூலம் நடத்தி, கடம் புறப்பாடும், அபிஷேகம் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்திக்கு, சிறப்பு பாலாபிஷேகம், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலை 5:00 மணிக்கு, சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்திருந்தது.