பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
03:04
உடுமலை: பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலையிலுள்ள கோவில்களில், ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சித்திரை மாத வளர்பிறை நவமி நாள், ராமபிரானின் அவதார தினமாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தை, ராம நவமியாக கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில், பொள்ளாச்சியிலுள்ள வைணவ கோவில்களில், நேற்று ராம நவமி விழா சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. டி.கோட்டாம்பட்டி கோதண்ட ராமர் கோவிலில், ராம நவமி விழா திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவ விழாவாக கொண்டாடப்பட்டது.நேற்று முன்தினம் காலை ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சீதா, ராமர் திருக்கல்யாணம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாலை, திருஊஞ்சல் சேவை, வீணை இசை கச்சேரி, இரவு சீதா, ராமர் சயனா திவாசத்துடன் விழா நிறைவடைந்தது.சின்னநெகமம் ரோட்டில், விழுதில்லா ஆலமரத்தடியில், பட்டாபிராமர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பாவை பாராயணம் படிக்கப்பட்டது. தொடர்ந்து, சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் மலர் துாவி வணங்கினர்.ஆதியூர் ராமர் கோவிலில், சீதாராமர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, பெருமாளுக்கு ஒன்பது வகை திரவியங்களால் அபிஷேகம், ஒன்பது வகை பூக்களால் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
உடுமலைஉடுமலை தில்லை நகரில் ஆனந்தசாயி கோவிலில், ராமநவமியையொட்டி, நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து ராமர், சீதைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயர், சீதை, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர், அன்னதானம் வழங்கப்பட்டது.