வைத்தீஸ்வரன் கோவிலில் 29ம் தேதி கும்பாபிஷேகம் : யாகசாலை பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2021 11:04
வைத்தீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் : யாகசாலை பூஜைகள்
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.இக்கோவில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறை களை பின்பற்றி விழா நடைபெறவுள்ளது.விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை சோமவாரம், விஷேச சாந்தி, பாவனாபிஷேகம் செய்விக்கப்பட்டு 2ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
மாலை விசேஷசாந்தி மூன்றாம் கால யாகசாலைபூஜைகள் தொடங்கி பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதினம் சத்யஞான அஜபாநடேசவர பண்டாரசந்நிதி, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தரிசனம் செய்தனர். அப்போது திருநெல்வேலி கட்ட ளை மடம் திருஞானசம்பந்தம் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.