பதிவு செய்த நாள்
27
ஏப்
2021
12:04
திருவண்ணாமலை: கொரோனா தடை உத்தரவால், அருணாசலேஸ்வரர் கோவிலில், மன்மத தகன நிகழ்ச்சியில் பங்கேற்க, பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து, யாரையும் அனுமதிக்கவில்லை.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம், கடந்த, 17ல், தொடங்கி, தினமும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், ஆண்டுதோறும் வழக்கமாக வசந்த உற்சவ நிறைவு நாளன்று, அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடக்கும். இந்த ஆண்டு கொரோனா தடையால், அய்யங்குளத்தில் இருந்து புனிதநீர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, ஆயிரங்கால் மண்டபம் எதிரே, சூல வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மன்மத தகனம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால், நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.