மானாமதுரையில் வெள்ளை குதிரை வாகனத்தில் வீர அழகர் வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2021 05:04
மானாமதுரை : மானாமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, குதிரை வாகனத்தில் வீர அழகர் எழுந்தருளி வலம் வந்தார்.
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்தாண்டு கொரோனா தொற்றால் நடைபெறாத நிலையில் இந்தாண்டு தமிழக அரசு விழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 23 ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்களின்றி உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதை ஒட்டி வீர அழகர் சுவாமிக்கு அதிகாலையிலேயே திருமஞ்சனம் நடத்தப்பட்டு கள்ளழகர் வேடமிட்டு சுவாமி கோயிலுக்குள்ளேயே பக்தர்களின்றி வலம் வந்து கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளை அர்ச்சகர் கோபிமாதவன் செய்தார். இன்று நடைபெறும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.