ஒரு பள்ளியில் அமைதி என்னும் தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. பல மாணவர்கள் தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்தனர். . மாணவன் ஒருவன் மலைச் சரிவுகளுக்கு இடையே நீரோட்டத்தின் மத்தியில் சிறு படகு சலனமும் இன்றிச் செல்வதையும், வேறு ஒருவன் புறாக்கள் பயமின்றி சிறகடித்து பறப்பதை வரைந்திருந்தான். மற்றொருவன் உழவன் வயல்வெளியை உழுவது போல வரைந்திருந்தான். இப்படி அனைவரும் தங்களின் கற்பனைக்கேற்ப ஓவியங்களை வரைந்திருந்தனர். இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்ட ஓவியம் ஒன்று முதல் பரிசை வென்றது. அதில் இடம் பெற்றது என்ன தெரியுமா? பேரிரைச்சலோடு விழும் அருவி, சிறுவர்களின் ஆரவாரம், சிலர் துணி துவைக்கும் சத்தம் இவற்றிற்கு மத்தியில் ஒரு வளைந்த மரத்தின் பொந்தில் சிறிய பறவை கண்மூடித் துாங்கிக் கொண்டிருந்தது. இதுதான் உண்மையான அமைதி என அப்படம் விளக்கி பரிசைத் தட்டிச் சென்றது. ஆம்! வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்திருந்தாலும், அவற்றுக்கு நடுவில் ஆண்டவரின் அன்புக்கைளில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். . அதுவே உண்மையான சமாதானம். ஆம்! வாழ்வில் பிரச்னைகளின் வழியாக நாம் பயணிக்கும் போது ஆண்டவரிடத்தில் நமது பாடுகளை தெரியப்படுத்த வேண்டும். அப்போது அவரது கனிவான பார்வை கிடைக்கும். மன பாரம் போக்கி, அமைதி, ஆறுதலை தருவார். எனவே உங்களின் கவலைகளை அவர் மீது வையுங்கள்.