காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தலில் பழமை வாய்ந்த பெரியநாகலிங்க சுவாமி சித்தர் பீடம் மற்றும் ராகு கேது பரிகார கோயில் கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
காரியாபட்டி கணக்கனேந்தலில் ஐந்து தலைமுறைக்கு முன் பெரியசாமி என்பவர் வாழ்ந்தார். திருமணமாகாத இவரை பாம்பு தீண்டி மரணம் அடைந்தார். அக்கிராமத்தில் உள்ள சிலரது கனவில் நாகராஜாவாக தோன்றி ஊரை காக்கும் தெய்வங்களில் ஒன்றாக ஏனைய தெய்வங்களுடன் தன்னையும் வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி மறைந்தார். சிலர் சாமி உத்தரவு பெற்று செயல்பட வேண்டும் என கோடாங்கி ஒருவரை வரவழைத்து குறி கேட்டனர்: கனவில் வந்து சொன்னது உண்மை என்றால் இந்த கூட்டத்தில் காட்சி அளித்து சொல்லட்டும் என சிலர் தெரிவிக்க, அப்போது கூட்டத்தின் நடுவில் பாம்பாக தோன்றி படமெடுத்து ஆடி காட்சி அளித்தார். அவரை தெய்வமாக ஏற்றுக்கொண்ட ஊர்மக்களும் சுற்று வட்டார மக்களும் நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர். காலப்போக்கில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து போதிய வழிபாடு செய்யாததால் கோயில் இருந்த இடம் தெரியாமல் போனது. இதையடுத்து மீண்டும் சிலரது கனவில் வந்த நாகராஜா, வழிபாடு செய்ய கேட்டுக் கொண்டதையடுத்து நூறு ஆண்டுகளுக்கு பின் ராகு-கேது பரிகார தளம் அமைத்து, பெரிய நாகலிங்கத்திற்கு கோபுரம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தினர். இக்கோயிலில் மனமுருகி வேண்டியவர்களுக்கு காட்சியளித்து வேண்டிய வரங்களை தந்து அருள் புரிவதோடு, சர்ப்பதோஷம் உள்ளவர்கள் ராகு மற்றும் கேதுவிற்கு விளக்கு ஏற்றி பரிகாரம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் நிவர்த்தியாகிறது என பக்தர்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.