திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2021 11:05
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அலங்கார தீபாராதனை நடந்தது.
இக்கோயிலில் சித்திரை தேய்பிறை பஞ்சமியில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பூத்திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் விழா ரத்தானது. ஆகம விதிகளின்படி பக்தர்களை அனுமதிக்காமல் சம்பிரதாயமாக விழா நடந்தது. இன்று(மே.,1) காலை 9:00 மணி அளவில் மூலவர் அம்மன் மஞ்சள் பட்டுடுத்தி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அலங்காரத் தீபாராதனை நடந்தது.வழக்கமாக பக்தர்கள் அம்மனுக்கு எடுக்கும் பால்குடம், பூத்தட்டு ஊர்வலம் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் கோயிலுக்கு வந்த சில பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு முன்பாக பூட்டியிருந்த கதவிற்கு முன் பூக்களை வைத்து அம்மனை வழிபட்டனர். மதியம் அம்மன் பச்சைப்பட்டுத்தி சந்தனக் காப்பில் வெள்ளி அங்கி அணிந்து அருள்பாலித்தார். மாலையில் மீண்டும் அலங்காரத் தீபாராதனை நடந்தது.