கவலை இல்லாத மனிதன் என யாருமில்லை. பணக்காரராக இருப்பவர்கள் லட்ச ரூபாயில் பஞ்சு மெத்தை வாங்கலாம். ஆனால் துாக்கத்தை வாங்க முடியுமா? கவலை, துன்பம் மனிதனைத் தாக்கும் போது நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். மாணவன் ஒருவன் ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல மறுத்தான். ஏன் என்று கேட்டதற்கு ‘‘இன்று தேர்வு இருக்கிறது. சரியாகப் படிக்கவில்லை. சரியாக எழுதாவிட்டால் ஆசிரியர் கண்டிப்பார்’’ என்றான். ‘‘உனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு வா’’ என்றனர் பெற்றோர். ஆனால் அவன் செல்ல வில்லை. அன்று மாலை அந்த மாணவனின் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்தான். ‘‘டேய்... நீ தேர்வு எழுத வந்திருக்கலாம். போன வாரம் நீயும் நானும் சேர்ந்து படித்தோமே அந்த பாடங்களில் இருந்தும் நிறைய கேள்விகள் கேட்டிருந்தனர். நீ தேவையில்லாம பயந்து வீட்டில இருந்துட்டியே’’ என்றான். அதைக் கேட்டு மாணவன் நொந்து போனான். “அம்மா... நான் தவறு செய்து விட்டேன். வினாத்தாள் எளிமையாக இருந்தது. பெரும்பாலும் எனக்குத் தெரிந்த கேள்விகள் தான்’’ என அழுதான். படிக்காத பாடத்திலிருந்து தான் கேள்விகள் வரும் என கற்பனை செய்து, அதை பூதாகரமாக்கிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். இனி வருந்துவதால் என்ன பயன் எனக் கேட்டாள் தாய். எந்தச் செயலிலும் முயற்சியைக் குறைவின்றிச் செய்ய வேண்டும். முடிவை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும்.