மற்றவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து இன்றைக்குப் பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வகுப்புகள் நடக்கின்றன. அவர்கள் இரண்டு விஷயங்கள் வலியுறுத்துகின்றனர். * எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் பேசுங்கள். * அனைவரிடமும் கர்வமின்றி நடந்து கொள்ளுங்கள் இதற்குத் தான் ஆயிரக்கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் செலவே இல்லாமல் நற்பண்புகளை கற்றுத் தருகிறார் நாயகம். “உங்கள் சகோதரனைப் பார்த்துப் புன்னகை செய்வதும் தர்மமே. பேச்சிலும், நடத்தையிலும் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆவான். தலைமைப் பண்பு உள்ளவர்களிடம் இருக்கக் கூடாத குணம் கர்வம். கர்வம் இருக்குமிடத்தில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகள் மறைந்து விடும். உள்ளத்தில் துளியளவு கர்வம் இருந்தாலும் சுவனத்தில் நுழைய முடியாது’’ என்கிறார். இதைக் கேட்ட தோழர் ஒருவர், ‘‘அழகான உடையும், காலணியும் அணிந்தால் அது ஒரு மனிதனைக் கர்வத்திற்கு ஆளாக்குமா?’’ எனக் கேட்டார். “இல்லை. இறைவன் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான். சத்தியத்தை மறுப்பதும், பிறரை இழிவாக கருதுவதும் தான் கர்வத்தை உண்டாக்கும்’’ என்றார்.