‘நாம் எதற்காக உலகிற்கு வந்தோம்’ என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் ஏதோ வாழ்ந்தோம், மரணமடைந்தோம் என்றிருந்தால் வாழ்ந்து பயனில்லை. இறைவன் நம்மை மனிதனாகப் படைத்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதை சரிவர பயன்படுத்தாமல் சிலர் தவறான முறையில் வாழ்வு நடத்துகின்றனர். அதர்ம வழியில் பணம் தேடுகின்றனர். அதை மறைக்க ஏழைகளுக்கு உணவளிப்பது, அனாதை, முதியோர் இல்லத்திற்கு ஆதரவு அளிப்பது என்று பணம் செலவழிக்கின்றனர். . இதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நாயகம். தர்மம் செய்வது நன்மையைத் தரும். ஆனால் ஹராமான வழியில் (தடை செய்யப்பட்ட வழியில்) தேடிய பணத்தால் தர்மம் செய்தால் நன்மை கிடைக்காது. அதற்கான பாவத்தைச் சுமக்க நேரிடும். ‘‘தடை செய்யப்பட்ட வழியில் தேடிய பணத்தில் ஒரு உருண்டை உணவு ஒருவனது வயிற்றை அடையுமானால், அவனது தொழுகையை இறைவன் ஏற்க மாட்டான்’’