பதிவு செய்த நாள்
06
மே
2021
07:05
அது ஒரு காலத்தில் மகிசூர் எனப்பட்டது. மகிஷாசுரன் ஆண்ட பூமி அவன் பெயராலேயே அழைக்கப்பட்டது. தலைமைக்கேற்ற தகைமை இல்லாமல், மக்களுக்கு நன்மை செய்யும் சிம்மாசனமாக இல்லாமல், அரக்கனாகத் துன்புறுத்தியவனை அழித்த மகாசக்தி தான் மகிஷாசுரமர்த்தினி என்னும் சாமுண்டீஸ்வரி.
‘‘சாகாவரம் வேண்டும்’’ என்று சிவனிடம் வேண்டிப் பெற்றான் மகிஷன். ஆண்கள், விலங்குகள் நீர் மூலமாக அழிவு ஏற்படாது என்னும் வரம் அளித்தார் சிவன். மரணமில்லை என்னும் வரம் மகிஷனுக்குள் மமதை ஏற்படுத்தியது. மன்னனாக இருக்கத் தகுதியை இழந்தான். துன்பங்களின் துவக்கமும், நீட்சியும், முடிவுமானான் மகிஷன். நல்லோரின் இன்னல் தீர்க்கவும் அரக்கனின் அட்டூழியம் அழிக்கவும் அவதரித்த பெரும்சக்தி சாமுண்டி.
தீமையை அழித்த தேவி. சங்கடங்களை சம்ஹாரம் செய்த சக்தி. அரக்கனை, அரக்கத்தை இல்லாதொழித்த அவதாரம். சத்தியம் நிலைநிறுத்திய சாமுண்டி இன்னும் பலவிதங்களில் சொல்லலாம். அம்மையின் பேராற்றல், குளிர்மை, போர்த்திறம், தாய்மை, அருளாட்சி, கருணை மாட்சியை நினைக்க நினைக்க அம்மையின் விஸ்வரூபத்தில் பேச்சிழந்து, சொல் இழந்து, செயல் மறந்து, நம்மையும் நாம் மறந்து, நம் பேர் மறந்து, நம் வேர் மறந்து ஆனந்த சுகானுபவத்தில் கரைகிறோம்.
ஆதி தேவதையாக வீற்றிருக்கும் அம்மை சாமுண்டி. அவள் குடியிருக்கும் மலை, அவளின் திருக்கோயில், பொன் நிறத்தில் பொலியும் கோபுரம், அதில் மெருகூட்டும் சிற்பங்கள், ஏழு தங்கக் கலசங்கள், கருவறை, எண்கரம் கொண்ட அம்மை எல்லாமே அழகு என்பதாகப் பொலியும் சாமுண்டிஸ்வரி கோயில் மைசூருவின் பொக்கிஷம்.
கோபுரம் வரவேற்க கட்டடக்கலையின் நேர்த்தியும், திருத்தேரின் கீர்த்தியும் வரவேற்க நீளமான பிரகாரமும், விஸ்தாரமான கோயிலும் வரவேற்க ‘‘வா மகளே வா... உனக்காக எத்தனை காலம் காத்திருக்கிறேன் தெரியுமா?’’ என்பதான வாஞ்சையுடன் வரவேற்க விதிர்விதிர்த்தேன்.
அசுரனை வதம் செய்கையில் ஆக்ரோஷத்தின் உச்சமாக, ரவுத்திரத்தின் உச்சமாக இருப்பவள் சாமுண்டி. அவளே பக்தர்களுக்கு இதம் செய்கையில் பனிக்குட நீரின் குளிர்மையும், தொப்புள் கொடியின் உயிர்மையுமாகச் சிரிக்கிறாள். தீமையை இல்லாதொழிக்கப் பல்லாயிரம் பல்லாயிரம் மக்களைக் காப்பதற்காகக் கைகளில் ஆயுதம் ஏந்திய சாமுண்டி தான்.
நன்மையை எங்கும் நிறைக்கப் பல்லாயிரம் பல்லாயிரம் மக்களைக் காப்பதற்காகக் கருணையைக் கண்களில் ஏந்துகிறாள்.
‘‘கல்வி ஞானம் சரஸ்வதி, வீர பாணம் காளி, செல்வ ஏனம் லட்சுமி மூன்றின் ஒற்றை அவதாரம் நீ தாயே... நான் துாசியிலும் கடைக்கோடித் துாசி... மனமார வேண்டுவது உன் ஆசி’’ வணங்கினேன். நெகிழ்ந்தேன். மகிழ்ந்தேன். உருகினேன். மனதில் அம்மையை நிறைத்தேன். அம்மையின் கருணையால் நிறைந்தேன்.
நிலத்தில் இருந்தும், கடல் மட்டத்தில் இருந்தும் மூவாயிரம் அடிக்கு மேலே வீற்றிருந்து அம்மை சொல்லும் சேதி என்ன? ெஹாய்சாளப் பேரரசர் விஷ்ணுவர்த்தன் காலம் தொட்டு இன்று வரை அம்மையைக் கொண்டாடும் காரணம் என்ன? ஒற்றை மகிஷாசுரனுக்கே அவதாரம் செய்து அழித்த அம்மை, இன்று திரும்பிய திசையெல்லாம் அசுரனாக இருந்தாலும் மவுன சாட்சியாக இருப்பதன் காரணம் என்ன?
மனசெல்லாம் நொறுங்கிப் போய், வெடித்து விடுமளவுக்கு வருத்தமும், வேதனையும் துளைக்கும் போதும், கதறும் போதும் அபயகரம் நீட்டாமல் மாயப்புன்னகை செய்யும் காரணம் என்ன?
மற்றவர்களிடம் இருந்து கமகமக்கும் மலர் மாலைகள் அம்மைக்கு. என்னிடம் இருந்து கேள்வி மாலைகள் அம்மைக்கு, ‘‘இது எனக்குப் புதிதா என்ன? அம்மைக்கும் மகளுக்குமான அன்பின் ஊடல். நியாயத்தின் தேடல் மகளுக்குப் புரிய வைப்பது தாயின் பொறுப்பு தானே... முதலில் நீ கோயிலை வலம் வா மகளே...’’ மவுன வார்த்தைகளால் பேசினோம். மவுன வார்த்தைகளால் குசலம் விசாரித்தோம்.
அம்மையின் திருமேனியை அலங்கரித்த வண்ணமாலை, செம்பட்டுச் சேலை, தங்கமும், பச்சை மரகதமும், பவளமும், வைர, வைடூர்யமுமான ஆபரணங்கள் இதில் ஒரு துளியாகவேனும் நான் இருக்க மாட்டேனா? அம்மையின் மாய சுகந்தத்தை அம்மையின் தாய்மைப் பேரொளியை இன்னமும் அணுக்கமாக உணரும் பேறாக விளங்குமே...இந்த ஏக்கம் சுமந்து கருவறை தாண்டிப் பிரகாரம் வந்தேன்.
கூப்பிய கைகளும், கும்பிடும் மனசுமாக வலம் வந்தவர்களின் சிந்தனை முழுக்க சாமுண்டி மனசு முழுக்க சாமுண்டி. எல்லா வலியும் சாமுண்டி தீர்ப்பாள். எல்லா வழியும் சாமுண்டி திறப்பாள். எல்லாக் கவலையும் சாமுண்டி உடைப்பாள். இந்த ஒற்றை நம்பிக்கையும், கற்றை நெகிழச்சியுமாகக் கரை காணாத நிறைவுமாக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்.
‘‘நல்ல மனசு தான் பெரிசு... பெரிக்கு ஒல்லேய மனசு...’’ கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லா மக்களும் நம்பிக்கைகளிலும், அறங்களிலும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கிறார்கள் உலகம் முழுக்கவே என்பது சாமுண்டி காலடியில் நிரூபணமானது.
பதவி பெரிதல்ல. பதவிக்குப் பொருத்தமான நல்ல மனசு தான் பெரிது என்பது தானே மகிஷாசுரன் கதை சொல்லுவது? மகிசூரு – மகிஷன் ஊரு எனப்படும் அளவுக்கு அவன் பெயரிலேயே ஊரின் பெயர் வழங்கப்படும் அளவுக்குத் தலைமை வகித்தவன் தேர்ந்தெடுத்த பாதை தீமைகளின் பாதை. எனவே அசுரன் அழிக்கப்பட வேண்டியவன் என்றாகிறான். ஒரு மகிஷாசுரனை சாமுண்டி சம்ஹாரம் செய்தாள். இப்போதும் மகிஷன் நாமாக இருப்பதும், நம்மில் இருப்பதும், நமக்குள் இருப்பதும் இல்லை என்று சொல்ல முடியாதே?
சின்னச்சின்ன மகிஷன்கள் நம்முள் நிறைந்திருக்கிறார்கள். ‘எனக்கு அவள் தீங்கு செய்து விட்டாள்’ என் குடும்பத்துக்கு அவன் தீங்கு செய்தான்’ என்று நாம் புகார்ப் பட்டியல் தருகிறோம் சாமுண்டியிடம்...
மலை உச்சியில் இருக்கும் சாமுண்டி கோயிலில் இருந்து கீழே ஊர் விளையாட்டு பொம்மையைப் போல குட்டி குட்டியாகத் தெரிந்தது. மூவாயிரம் அடிக்கு மேலே சென்றால் அகல நீள பிரம்மாண்டமான ஊரும் கடுகளவாகிறது.
‘‘கஷ்டமட்டு வினோதவன்னு நோடி’’ – கஷ்டத்தை வேடிக்கை பாரு... ஏன் கஷ்டத்துக்குள்ள மூழ்கிப் போற? இடது கை வலது கை மாதிரி வாழ்க்கையும், கஷ்டமும் கூடவே இருக்கும். ஆனா ரெண்டுமே தனித்தனியாகவே பார்க்கப் பழகு... சாமுண்டி அந்தப் பக்குவத்தைத் தருவா...’’
பெரியவர் அசரீரி போலச் சொன்னார். அட... நிஜம் தானே... புல்லாங்குழல் இசை நம்மை மயக்குகிறது. மந்தஹாசம் தருகிறது. ஆனால் புல்லாங்குழலாக உருமாறும் முன்பு, மூங்கில் கட்டையைத் கத்திகள் துளைப்பதும், மெருகேற்றுவதும் நிஜம் தானே? புல்லாங்குழல் ஆக ஆசைப்பட்டால் கத்தியின் கீறலுக்கு அஞ்சக் கூடாது என்பது தான் சாமுண்டி தரும் ஞானமோ?
மகிஷாசுரன் திருஉருவம் முன்பு ஒருவர் நின்று கண்ணீர் மல்கி, கைகூப்பி வணங்கினார். பார்த்ததும் அவராகவே சொல்லத் துவங்கினார்.
‘‘மகிஷன் மாதிரி தான் இருந்தேன். சாமுண்டி தான் என்னை மாத்தினா...என் தப்பை எல்லாம் அடிவாரத்திலே விட்டுட்டு அம்மாவைத் தரிசிக்க மேல வந்தேன். மலை உச்சியிலே மனசு ஜில்லுன்னு இருக்கு’’ இது தான் சாமுண்டி மலையின் தத்துவமோ? வாழ்க்கை மலை அடிவாரம். நிம்மதி மலை உச்சி. கீழேயே உழன்றால் வலி, வெப்பம், வேதனை எல்லாம் உண்டு. மனசுக்கு மலையேற்றம் பழக்கினால் அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்குப் போகலாம். பிரச்னைகள் இருக்கும். அதனால் உணரும் வலிகள் இருக்காது. மலைப்பாதைப் பயணத்தில் எல்லாத் தீமையும் சுமையென்று கீழேயே விட்டு விட்டு, வெறும் கையோடு பயணித்தால் உன்னதம் புலனாகும்.
‘‘இப்ப இப்ப – சாமுண்டிகிட்ட என் வேண்டுதல் இது தான். பிரச்னைகள் வேண்டாம்னு வேண்ட மாட்டேன் பக்குவமா பிரச்னைகளை ஏத்துக்கற மனசு தா...பிரச்னைகளால் துவளாத மனசு தா... பிரச்னைகளை வேடிக்கை பார்க்கற மனசு தா... இப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன்’’
சாமுண்டி வதம் செய்த மகிஷாசுரன் உருவில் தன்னை உணர்ந்தவர் மனமுருகிப் பேசினார். அவரின் கண்ணீரில் சாமுண்டி சிரித்தாள். அவரின் நெகிழ்ச்சியில் சாமுண்டி சிரித்தாள். கேள்விகளுக்கான பதில்களைக் காற்றில் துாது விட்டாள் அம்மை. மனசின் அலை பாய்தலுக்கான அருமருந்தாக அனுபவங்களைத் துாது விட்டாள் அம்மை. மறுபடியும் கருவறை தரிசனம் தேடினேன். மந்தஹாசப் புன்னகையும், எட்டு கைகளில் திருவிழிகளில், புன்னகையில் வாழ்வின் மருந்தாகவும், வாழ்வின் விடியலாகவும் எல்லாமாகவும் இருக்கின்ற சாமுண்டி ‘‘புரிகிறதா?’’ என்றாள். ‘‘நீ எல்லாமாகவும் இருக்கும் போது நீ தான் வலி. நீ தான் வழி என்பது புரிகிறது தாயே’’
சாமுண்டி மலையாக மனசு நிறைந்தது.