தொழில், உறவு முறைகளில் நம்மையும் மீறி எப்படியோ எதிரிகள் முளைத்து விடுகின்றனர். அவர்களால் ஏற்படும் பயம், தொல்லைகளைச் சொல்லி மாளாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமா... ஒருமுறை கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமார சுவாமியை தரிசியுங்கள். முருகனின் ஆறுமுகங்களுக்கும் இக்கோயிலில் தனித்தனியாக பூஜை நடக்கிறது. நமுசி என்ற அசுரன் எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என சிவனிடம் வரம் பெற்றான். இதைப் பயன்படுத்தி தேவர்களை துன்புறுத்தினான். இம்சை தாங்க முடியாத அவர்கள் சிவனிடம் முறையிட்டனர். வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அசுரனைக் கொல்ல சிவன் முடிவெடுத்தார். “ஆயுதத்தால் தானே அசுரனுக்கு அழிவில்லை. கடல் நுரையை வீசினால் அவன் அழிந்து போவான்” என்று சொல்லி தன் ஆற்றலை நுரையின் மீது பாய்ச்சினார். இந்திரனும் அந்த நுரையை வீசி அசுரனைக் கொன்றான். தனக்கு உதவிய சிவனுக்கு நன்றிக்கடனாக சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டையில் இந்திரன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவரே இங்கு விஸ்வநாதர் என்ற பெயரில் குடியிருக்கிறார். அம்மனுக்கு விசாலாட்சி என்பது திருநாமம். பிற்காலத்தில் ‘முத்துக்குமார சுவாமி’ என்னும் பெயரில் முருகன் சன்னதி உருவாக்கப்பட்டது. பதவி, பொருள் இழந்தவர்கள் இழந்ததைப் பெற விஸ்வநாதருக்கு சம்பா சாதம் படைத்து வழிபடுகின்றனர். எதிரி பயம், செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமைகளில் முத்துக்குமார சுவாமிக்கு ‘சத்ரு சம்ஹார திரிசதி’ என்னும் அர்ச்சனை செய்கின்றனர். மலையில் பிறந்த வள்ளியை முருகன் திருமணம் புரிந்ததால் தேனும், தினைமாவும் நைவேத்யம் செய்து பிரசாதமாக தருகின்றனர். திருவிழாவின் போது சிவனுக்குரிய ரிஷபம், இந்திரனுக்குரிய ஐராவதம் என்னும் யானை, ஆடு, இடும்பன் வாகனங்களில் முருகன் எழுந்தருள்கிறார். கந்தசஷ்டிக்கு மறுநாளில் தெய்வானையுடனும், தைப்பூசத்தன்று வள்ளியுடனும் திருமணக்கோலத்தில் சுவாமியை தரிசிக்கலாம். சர்ப்பதோஷம் தீர ஐந்துதலை நாகருக்கு ராகுகாலத்தில் அர்ச்சனை செய்கின்றனர். இக்கோயிலுக்கு அருகில் இமயமலையில் தவமிருந்த பாபாஜிக்கு கோயில் உள்ளது. எப்படி செல்வது? சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ.,