பதிவு செய்த நாள்
11
மே
2021
05:05
சூலூர்: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணங்கள் கட்டுவதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்தாண்டு துவக்கத்தில் நாடு முழுக்க துவங்கியது. மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து படிப்படியாக பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தன. மக்களும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். சூலூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வீதிகளிலும், வீடுகளிலும் வேப்பிலை தோரணங்களை கட்டியிருந்தனர். வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை ஊருக்குள் தெளித்தனர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைந்துள்ளது. அதனால், தற்போது, மீண்டும், வீதிகளில், வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டும் பணியில் மக்கள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வேப்பிலையும், மஞ்சளும் கிருமி நாசினிகள் ஆகும். அவற்றை நீரில் கலந்து வாசல் தெளித்தால் கிருமிகள் அண்டாது. வாசல் நிலவுகளில் மஞ்சள் பூசலாம். வாசலில் தோரணமாகவும் கட்டி கிருமி பரவலை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் அதை பின்பற்றி வருகிறோம். இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கூட பலரும் வேப்பிலையை கட்டிக்கொண்டு செல்கின்றனர். இவை அனைத்துமே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் ஆகும். இவ்வாறு, மக்கள் கூறினர்.