பதிவு செய்த நாள்
11
மே
2021
05:05
தேனி:தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான ஓங்காரநந்த ஸ்வாமி 62,மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதையும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய ‛தர்ம ரஷண சமிதியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு. ஓங்காரநந்த ஸ்வாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6:15 மணிக்கு மகா ஸித்தி அடைந்தார். அவர் ஸித்தியடைந்தது ஹிந்து சமுதாயம், நாட்டிற்கு குறிப்பாக தமிழகத்திற்குப் பேரிழப்பாகும். தேனி வேதபுரீ ஆஸ்ரமத்தில் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புகழஞ்சலி: ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்ததற்கு மதுரை ஆதீனம் குருமாகாசன்னிதானம் கூறுகையில், ‛ஓம்காரநந்த ஸ்வாமிகள் ஆன்மா சாந்தி பெற்றிடவும், எல்லாம் வல்ல இறைவன் சன்னிதானத்தில் நிம்மதியாகவும், மகிழ்வாகவும் வாழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றோம்,என்றார். ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவர் (தென்தமிழகம்) ஆடலரசன் கூறுகையில், ஹிந்து விரோத போக்கினை வன்மையாக துணிவாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு செயலாற்றி வந்த ஸ்வாமிகளின் மறைவு, தமிழகத்திற்கு பேரிழப்பாகும் என, தெரிவித்துள்ளார். தான் ஸித்தி அடைவது குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே சீடர்களிடம் சுவாமி தெரிவித்தார். அதன்படி அந்த இடத்தில் இறுதி நிகழ்வுகள் நடக்க உள்ளன. தொடர்புக்கு குருசேவக் 77082 31122
எல்லாம் அறிந்தவர்: ஹிந்து மதத்தின் பாரம்பரியத்திற்கும், ஆன்மிக சிந்தனைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் பணியை மேற்கொண்டவர் ஓங்காரநந்த ஸ்வாமிகள். தனது சொற்பொழிவுகள் மூலம் வேதங்களின் புனித தன்மையை உலகிற்கு எடுத்துக் கூறினார். பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் அர்த்தங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
அமைதியான ஆனந்தம்: ஜாதி, மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கடந்து அனைத்து மக்களிடம் அன்பாக பழகினார். அனைவருக்கும் என்றும் அமைதியான ஆனந்தம் என்ற லட்சியத்துடன் செயல்பட்டார் ஓங்காரநந்த ஸ்வாமிகள். நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு வேதங்களின் தத்துவத்தை புதிய தலைமுறைக்கு புரிய வைத்தார். ஆழ்மனதில் மகிழ்ச்சி அடைதல், நீதி பாடங்களை போதித்தார்.
சமூக பணி: ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய பூஜ்ய ஸ்ரீ பரமார்த்தானந்தாவிடம் சன்னியாசம் பெற்றார். ஸ்ரீ தக் ஷிணாமூர்த்தி சேவா சமிதி, வேதாந்தா சாஸ்திர பிரசார அறக்கட்டளை மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டார்.
பெரும் இழப்பு: ஓங்காரநந்த ஸ்வாமிகள் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர். ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். இவரை ஏராளமான சீடர்கள் பக்தியுடன் பின்பற்றினர். இவர் சித்தி அடைந்தது ஹிந்து மதத்திற்கு பெரும் இழப்பு.