பதிவு செய்த நாள்
15
ஜூன்
2012
10:06
சேலம்: சேலத்தில், பகவத் ராமானுஜர் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ராமானுஜர் அவதரித்து, 1,000 ஆண்டுகளாவதையடுத்து, பகவத் ராமானுஜர் கைங்கர்ய சொஸைட்டி சார்பில், சேலம் எருமாபாளையத்தில், 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்படுகிறது. மணி மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று நடந்தது. திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் தலைமையில் ராமானுஜர் மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நேற்று காலை திருவாராதனம், திருப்பல்லாண்டு, திருப்பாவை, ராமானுஜ நூற்றந்தாதி சேவா காலம், சாற்றுமுறை, காயத்ரி பாராயணம், தசாவதார ஆவாரஹனம், அர்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏ.வி.ஆர்., ஜூவல்லர்ஸ் சாந்தகோபாலன், ஆடிட்டர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். ராமானுஜர் கைங்கர்ய சொஸைட்டி தலைவர் ஸ்ரீராமன், செயலாளர் முரளிதரன், பொருளாளர் நரஸிம்ம மூர்த்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.