பதிவு செய்த நாள்
13
மே
2021
11:05
சென்னை :பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 51வது ஜீயர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கடந்த 6ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத் துறை, அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்புக்கு, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பல்வேறு ஆன்மிக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தற்போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஸ்தலத்தார்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது குறித்து, கோவில் ஸ்தலத்தார்கள் கூறியதாவது:ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை முழுமையாக சீரமைத்தவர் ராமானுஜர். அதன் பின், கோவிலை நிர்வகித்து வந்த ஸ்தலத்தார்கள், எம்பார் வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்பவரை அங்கீகரித்து, கோவில் கைங்கர்யங்களை வழங்கினர்.
அவர் தான் முதல் பட்டம். கடைசியாக, 50வது பட்டம் வரை, ஸ்தலத்தார் தகுதியானவரை தேர்வு செய்து, அவருக்கான நன்முறைகளை கூறி, கைங்கர்யங்களை செய்து வருகின்றனர்.
இதன்படி, 51வது ஜீயர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைமுறை செய்பவர்கள் ஸ்தலத்தார். இந்த மரபை மீறும் வகையில், ஜீயர் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை, எப்படி மதம் சார்ந்த நியமனங்களை செய்ய முடியும்?இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், மதம் சார்ந்த அமைப்புகளை நிர்வகிப்பதற்கும், நியமனங்களுக்கான உரிமையையும், மடங்களுக்கு வழங்கி உள்ளது. இதை மீறுவதாகவும் அறநிலையத்துறை அறிவிப்பு உள்ளது. சம்பிரதாயத்தைச் சார்ந்துள்ள மத குருமார்களையும், அறநிலையத்துறை நியமிப்பதாக கூறுவது, ஆன்மிகத்தின் ஆணிவேரையே பறிக்கும் செயல்.இவ்வாறு ஸ்தலத்தார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜீயர் நியமன அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக அறநிலையத்துறை கூறியுள்ளது.ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:
கடந்த முறை போல இந்த முறையும், ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பு, தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு நன்றி: ஜீயர் தேர்வுக்கான அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத்தும் நன்றி தெரிவித்துள்ளார்.