பதிவு செய்த நாள்
14
மே
2021
04:05
பரிசோதனை என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். தொலைதுாரம் செல்லும் மின் வண்டித் தொடர், பேருந்துகள், ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபடுவர். நாட்டில் நடைபெறும் நற்காரியங்களில் பண்டிகை நாட்களில் சுமுகமாக நடைபெறும் மாநாடுகளில் சமூக விரோதிகள் நுழைந்து குழப்பம், கலகத்தை துாண்டும் சந்தர்ப்பங்களில் காவல் துறையினர் பரிசோதனை செய்வதுண்டு.
அடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான கனரக ஆயுதங்கள், ஏவுகணைகள், ராணுவ டாங்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்து, ராணுவத் துறையினர் முதலில் பரிசோதித்து பார்ப்பதுண்டு. தற்போது கொரோனா தடுப்பூசிகள், கோவாக்சின், கோவிஷீல்டு இவையிரண்டும் கூட இரண்டு கட்ட பரிசோதனை செய்யப்பட்ட பின் தான், பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவை ஒருபுறம் இருக்க, இந்த ரமலான் மாதத்தில் நம்மை நாமே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது சொல்லப்படும் இந்த வார்த்தை, எந்த மதத்தையும் வசைபாடும் எண்ணத்திலோ, துதிபாடும் எண்ணத்திலோ எழுதப்படவில்லை.நாம் செய்கின்ற நல்ல பல காரியங்களில் குற்றங்கள், பிழைகள், தவறுகள் இருப்பதை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டினால், அதை பக்குவமான முறைகளில் கையாளும் திறன் நம்மிடம் அறவே இல்லை. நிதானத்தை இழந்து கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறோம்.
தானத்தில் சிறந்தது நிதானம், கண் தானம், அன்னதானம், ரத்த தானம் என்று பட்டியல் போட்டு வார்த்தைகளுக்கு நளினம் சேர்ப்பதில் இருக்கும் அக்கறை, நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதில் அறவே இல்லை.தொழுகை என்று எடுத்துக் கொண்டால், ஐந்து வேளை ஜமாத்துடன் (ஒன்று கூடி) தொழுகிறோமா, இறையச்சத்துடன் தொழுகிறோமா என்று சுயபரிசோதனை செய்து பாருங்கள். தற்போது வந்துள்ள கொரோனாவும், இறைவனின் பரிசோதனை தான். நம்பிக்கையாளர்களே... பயம், பசி, பொருட்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவற்றை கொண்டு நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். நபியே... இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (திருக்குரான் 2 - 155-156)
இறைவன் நம்மை பரிசோதனைக்கு ஆட்படுத்தும் முன்பே நம்மை நாமே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரணம், வருமுன் காப்பவன் அறிவாளி.நோன்பை முறைப்படி அனுசரிக்க வேண்டும். நோன்பு காலங்களில் பாதை தவறி நடக்கும் கால்கள், அடுத்தவர்களது பொருட்களை அபகரிக்க நீளும் நம் கரங்கள், தீயவற்றை கண்டும், கேட்கும் கண், காது போன்றவை, மதுபோதை, வன்புணர்ச்சியை துாண்டும் தீய சிந்தனைகள் இவற்றை சுயபரிசோதனைகள் மூலம் தவிர்த்துக் கொள்வதற்கான ஒரு முத்தான வாய்ப்பு, நோன்பை அனுசரிக்கும் இந்த ரமலான் மாத காலம்.
பணம் சம்பாதிக்க வேண்டியது தான். அப்படி சம்பாதிக்கும் வருமானம் முறைப்படி இருக்க வேண்டும். தீய வழிகளில் வழிப்பறி செய்வது, கொள்ளை அடிப்பது இவற்றிலிருந்து தான தர்மம் வழங்குவதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் சகோதரர்களே!நம்பிக்கையாளர்களே... நீங்கள் சம்பாதித்தவற்றில் இருந்தும் நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளியாக்கிய தானியம், கனி வர்க்கங்களிலிருந்தும், நல்லவைகளையே தர்மம் செய்யுங்கள். அவற்றிலிருந்து கெட்டனவற்றை கொடுக்காதீர்கள். நீங்கள் விரும்பாத பொருட்களை தானமாக தர்மமாக கொடுக்காதீர்கள் (திருக்குரான் 2 -267)
உங்களுடைய உண்மையான வருமானத்தில், 100க்கு இரண்டரை சதவீதம் எடுத்து, (பெற்றோரை தவிர்த்து) சொந்த பந்தங்களில் இருக்கும் உறவுகளுக்கும், ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் கொடுத்து, இந்த ரமலான் மாதத்தில் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து, புடம் போட்ட தங்கமாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளுங்கள் சகோதரர்களே!
உன் நண்பனை சந்திக்கும் போது புன்முறுவல் பூப்பதும், ஒருவகை தர்மம் என்று நபிகளார் கூறுகிறார். மனைவி, மக்களோடு, பெற்றோரோடு, அண்ணன், தம்பி, அண்டை வீட்டார்களோடு ஜாதி, சமயம் பாராது அனைவரிடமும் பாசத்தை பொழியுங்கள். காரணம், நாம் செய்யும் அனைத்தையும் மறைவான, வெளிப்படையானவற்றை அல்லாஹ் மிகவும் நன்கறிவான். (திருக்குரான் 2 -271)
ரமலான் என்கிற அரபு சொல்லிற்கு, கரித்தல், எரித்தல், சுட்டுப் பொசுக்குதல் என்று விளக்கம் நீண்டு கொண்டே போகிது. நமக்கு தேவைப்படாததை, உபயோகமில்லாததை, உபயோகித்த பொருட்களில் மிச்சம் மீதி உள்ளவற்றை போகி என்கிற பெயரில் எரித்து விடுகிறோமே... அதுவல்ல இது. நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களை ஐம்புலன்களோடு சேர்ந்தே உலா வரும் தீய குணங்களை சுட்டுப் பொசுக்க வேண்டிய மாதம், இந்த ரமலான் மாதம். பொறுமையின் மாதம் இது.
வங்கிகளில் போடப்படும் பணத்திற்கு வங்கி நிர்வாகம் வட்டி எனும் பெயரில் கொடுக்கும் பணத்தை எடுத்து நம் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாகாது. இஸ்லாத்தில் இதற்கு அனுமதி அறவே இல்லை. வட்டி என்பது இஸ்லாத்தை பொருத்த வரை நெருப்புக்கங்கு. நம் கைகளில் இருந்தால் நம்மையே சுட்டுப் பொசுக்கி விடும். அதை ஏழை, எளியவர்கள், வழிபோக்கர்களுக்கு கொடுத்து விட்டு, நம்மை நாமே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்தி, இறைவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள்.
நம்மிடம் இருக்கும் நெருப்புக்கங்கு ஏழை, எளியவர் கரங்களுக்கு சென்றால், அவர்களை சுட்டுப் பொசுக்காதா என்று அற்பத்தனமாக கேட்கக் கூடாது. இறைவன் அவர்களது மனங்களை குளிர்ச்சி அடையச் செய்வான்.இந்த ரமலான் மாதம் இன்னும் பல்வேறு காரணங்களால், 1,000 மாதங்களை விட சிறப்பான மாதம். இந்த ரமலான் மாதத்தில் நரகத்தின் அத்தனை வாசல்களும் மூடப்பட்டு, சொர்க்கத்தின் வாசல்களை இறைவன் திறந்து வைத்துள்ளான். இப்புனித ரமலான் மாதத்தில் நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். சுயபரிசோதனை செய்து, மனிதனின் புனிதனாக நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்.
- தொலைபேசி மீரா