பதிவு செய்த நாள்
15
மே
2021
12:05
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜருக்கு சதகலச திருமஞ்சனம் நடைபெற்றது. யு டியூப் நேரலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக அருள்பாலிக்கும் ராமானுஜருக்கு, மாதந்தோறும், திருவாதிரை நட்சத்திரம் அன்று, திருமஞ்சனம் நடப்பது வழக்கம். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசிப்பர்.ஆண்டுதோறும், சித்திரை மாதம், பிரம்மோற்சவ விழா முடிந்து, அடுத்து வரும் திருவாதிரை திருமஞ்சனம், சத கலச திருமஞ்சனமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறைஅப்போது, 108 கலசத்தில், மூலிகை நீரை கொண்டு, ராமானுஜருக்கு திருமஞ்சனம் விசேஷமாக நடக்கும்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வை, நேரில் கண்டு தரிசனம் செய்ய, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.இந்நிலையில், சத கலச திருமஞ்சனம், இன்று காலை, 11:30 மணிக்கு துவங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள், கோவிலில் கூடுவதை தவிர்க்க, சத கலச திருமஞ்சன விழாவை, சமூக வலைதளமான, யு டியூப் மூலமாக, நேரலையில் ஒளிபரப்பு செய்ய, ஹிந்து அறநிலையத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.பக்தர்கள், https://youtu.be/PtDYkauSSUs என்ற இணைப்புக்கு சென்று, சத கலச திருமஞ்சனத்தை, வீட்டில் இருந்து, நேரலையில் கண்டு தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.