பதிவு செய்த நாள்
17
மே
2021
11:05
திருநெல்வேலி: பாபநாசம் அகஸ்தியர் அருவியில், புயல், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அகஸ்தியர், லோபமுத்ரா சிலைகளை விரைவில் அங்கு நிர்மாணிக்க உள்ளதாக, அவற்றை ஏற்கனவே நிறுவிய அமெரிக்க டாக்டர் ரவிகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறது. மலையில் இருந்து வரும் வழியில் அகஸ்தியர் அருவியாக கொட்டுகிறது.அகஸ்தியர் அருவி அருகே உள்ள கல்யாண தீர்த்தம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு அகஸ்தியர், துணைவி லோபமுத்ராவுடன் நின்ற நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருந்தன. தவறான தகவல்அந்த சிலையை யாரோ விஷமிகள் உடைத்து விட்டதாகவும், அகஸ்தியர் அருவியில் விழும் தண்ணீரை வேறு பாதைக்கு திருப்பி விட்டதாகவும், சமூக வலைதளங்களில் படங்கள் பரவின.
இது குறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதம் கூறியதாவது: ஜனவரியில் பெய்த புயல், மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் லோபமுத்ரா, அகஸ்தியர் சிலைகள் அடித்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு காரணமாக, அகஸ்தியர் அருவிக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.இதனால், அந்த சிலைகளை யாரோ உடைத்து விட்டதாக வதந்தி பரப்புகின்றனர். அகஸ்தியர் அருவி நீரை, செயற்கையாக மடை மாற்றிவிட முடியாது. தற்போதும், தண்ணீர் விழுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கல்யாணதீர்த்தம் அருவி அருகே பழமையான லோபமுத்ரா, அகஸ்தியர் சிலைகள் இருந்தன. 1992 டிசம்பரில் ஏற்பட்ட பெருமழையில், சிலைகள் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது, அமெரிக்காவில் டாக்டராக பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த ரவிகுமார், தன் சொந்த செலவில் லோபமுத்ரா, அகஸ்தியர் சிலைகளையும், மண்டபத்தையும் அறநிலையத் துறை அனுமதியுடன், 2012 அக்டோபரில் அங்கு நிறுவினார்.சென்னையில் தயார்டாக்டர் ரவிகுமார் கூறியதாவது:அகஸ்தியர், லோபமுத்ரா இருவரும் தாமிரபரணி நதி மூலம், மக்களுக்கு அருள் பாலிப்பவர்கள். 2021 ஜனவரி வெள்ளத்தில் சிலைகள் அடித்துச் செல்லப்பட்ட தகவல் கிடைத்ததுமே, மீண்டும் அதே இடத்தில் புதிய சிலைகள் அமைக்க அறநிலையத் துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம். சென்னையில் ஸ்தபதி சந்தானகிருஷ்ணன், 3 அடியில் அகஸ்தியர், 2.75 அடியில் லோபமுத்ரா சிலைகளை வடித்துள்ளார்.கொரோனா பாதிப்புகள் முடிந்ததும், அங்கு மீண்டும் சிலைகளை நிறுவ உள்ளோம்.இந்த முறை, வெள்ளத்தில் பாதிப்படையாமல் இருக்கும் வகையில், திருநெல்வேலி குறுக்குத்துறையில், தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் போல, முக்கோண வடிவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.