பதிவு செய்த நாள்
17
மே
2021
11:05
ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலத்தில், இன்று கேதார்நாத் கோவில் நடையும், நாளை பத்ரிநாத் கோவில் நடையும் திறக்கப்படுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இமயமலையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. கோடை காலத்தில் மட்டுமே இந்த நான்கு கோவில்களும் திறக்கப்பட்டிருக்கும். குளிர்காலம் துவங்கியதும் கோவில்கள் மூடப்படும். இந்த நான்கு கோவில்களுக்கும் செல்வதற்கான யாத்திரை, சார்தம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சார்தம் யாத்திரைக்கு, உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ளது. கோடை காலம் துவங்கியதைஅடுத்து, யமுனோத்ரி கோவில் 14ம் தேதியும், கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினமும் திறக்கப் பட்டன. இரண்டு கோவில்களிலும் நடந்த நடைதிறப்பு பூஜைகளில், பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கேதார்நாத் கோவில் நடை இன்றும், பத்ரிநாத் கோவில் நடை நாளையும் திறக்கப்படுகின்றன. சார்தம் தேவஸ்தான நிர்வாக வாரிய தலைவர் ஹரீஷ் கவுர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் வழிபட, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நிலைமை சீரான பின், சார்தம் யாத்திரை மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.