பதிவு செய்த நாள்
17
மே
2021
05:05
வீரபாண்டி: கொரோனா பரவலை தடுக்க, வேப்பிலை கொத்துகளை கயிற்றில் கட்டி, தடுப்பு ஏற்படுத்திய, புது நபர்கள் நுழைவதை, வீதி மக்கள் தடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில், இரு மாதத்தில், 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி வட்டாரத்தில் மட்டும், நேற்று முன்தினம், 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியது. இதனால், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சாக்ரடீஸ் நகரில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இணைந்து, தங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க முடிவு செய்தனர். அதன்படி, பிரதான சாலையில் இருந்து, நகருக்குள் வரும் மூன்று சாலைகளிலும், தடுப்பு ஏற்படுத்தினர். அதற்கு முன்னதாக, இயற்கை கிருமிநாசினியான வேப்பிலை கொத்துகளை கட்டி தொங்க விட்டுள்ளனர். அனைத்து வீடுகளின் வாசல்கள்தோறும் வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்து, காலை, மாலையில் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். மேலும், தங்கள் பகுதியில் இருந்து, குறிப்பிட்ட சிலர் மட்டும் பொருட்களை வாங்க வெளியே சென்று வருவதோடு, புது நபர்களை வீதிக்குள் அனுமதிப்பதில்லை. அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை கடைப்பிடிக்க, வீதிகளை அடைத்து, மக்களும் அவசியமின்றி வெளியே செல்வதை தடுத்துள்ளனர். இதனால், அந்த நகரில், கொரோனா இல்லாத நிலை ஏற்படும் என, மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.