பதிவு செய்த நாள்
19
மே
2021
11:05
நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும், கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத்துறை தலைமையகம், கலையம்சத்துடன் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 38 ஆயிரத்து, 600 கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அறநிலையத்துறை. இதன் தலைமையகம், சென்னை நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் இயங்கி வருகிறது.
பாழடைந்த பங்களா: இங்கு, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம், கூட்ட அரங்கம், கூடுதல், இணை கமிஷனர் அலுவலகங்கள், பல்வேறு பிரிவுகள் அலுவலகங்கள், திருக்கோவில் இதழ் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இந்த அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்காகவும், தலைமை அலுவலகம் வந்து செல்லும் அறநிலையத்துறை அலுவலர்கள் வசதிக்காகவும், உணவகமும் நடத்தப்படுகிறது. மிக பழமையான இக்கட்டடம், பாழடைந்த பங்களா போல காணப்படுகிறது. நவீன தொழில் நுட்ப காலத்தில், இங்குள்ள அலுவலக அறைகள், பழைய காலத்தை காட்சிப்படுத்துகின்றன. பல கமிஷனர்கள் வந்தாலும், தலைமையகம் புனரமைக்கப்படாமல் உள்ளது. தலைமையகம் வந்து செல்பவர்களுக்கு இந்த கட்டமைப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தாமல், சலிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
மன அமைதி: இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், அலுவகத்தை பார்வையிட்ட பின், அங்குள்ள அதிகாரிகளிடம், இது தான் தலைமையகமா; ஏன் இதுவரை புனரமைக்காமல் வைத்துள்ளீர்கள் என, கேட்டுள்ளார்.மேலும், தான் இதற்கு முன் பணியாற்றிய, சிப்காட் அலுவலகத்தை பார்வையிட்டு வரும்படி, அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சிப்காட் அலுவலகம் சென்ற அலுவலர்கள், அதை பார்த்து அசந்து போயுள்ளனர். பல்வேறு கலை அம்சத்துடன், சிற்பங்கள், ஓவியங்கள் என, கலைக்கூடம் போல காணப்பட்டது. நம் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும், கோவில்களை நிர்வகிக்கும் அறநிலைய துறை தலைமையகத்திற்கு வருபவர்களுக்கு, நல்ல சூழல், மன அமைதி, உற்சாகம் ஏற்பட வேண்டும் என, குமரகுருபரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதையடுத்து, அறநிலையத்துறை தலைமையகத்தை, பூம்புகார் நிறுவனத்தின் உதவியோடு, கலையம்சத்துடன் புனரமைக்க, குமரகுருபரன் திட்டமிட்டுள்ளதாக, அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - நமது நிருபர் -