பதிவு செய்த நாள்
20
மே
2021
06:05
கோத்தகிரி: நீலகிரியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உலக படுகர் சங்கம் சார்பில், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில், பரவலாக கொரோனா தொற்று உள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்க, பொது ஊரடங்கு உட்பட, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவிர, தனியார் அமைப்புகள், உதவி செய்து வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, உலக படுகர் சங்கம் சார்பில், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிசாமி பழனிசாமி மற்றும் தலைமை மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆக்சிஜன் செறிவூட்டி, நெபுலிசர் மெஷின், மாஸ்க், பல்ஸ் ஆக்சிமீட்டர், இ.சி.ஜி., கருவி உட்பட, 17 வகையான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இதில், மருத்துவர்கள் சிவகுமார், பார்தீபன் உட்பட, செவிலியர்கள் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், உலக முழுவதும் வசிக்கும் படுகர்கள் ஒருங்கிணைந்து, கொரோனா தொற்றை தடுக்க, உதவி வருகிறோம். முதற்கட்டமாக, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, 5.80 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப தொடர்ந்து மருத்துவ உதவி வழங்கப்படும் என்றனர்.