பதிவு செய்த நாள்
20
மே
2021
06:05
கோல்கட்டா : வானில் மிக அரிதான ரத்த நிலா வரும் 26ம் தேதி தெரியும் என கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று நிகழ உள்ளது. இது குறித்து தேபி பிரசாத் துவாரி கூறியதாவது: சூரியன், பூமி, சந்திரன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம்.இதன்படி, வரும் 26ம் தேதி மிக அரிதான சந்திர கிரகணம், மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், மாலை 6:15 முதல் 6:22 மணி வரை, சில நிமிடங்களுக்கு சந்திர கிரகணத்தை காணலாம். அடிவானத்தில் கீழ் நிலவு இருக்கும் என்பதால், சென்னை, மும்பை, டில்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது; பூமியின் நிழலில் ஒரு சிறு பகுதியை நிலவு கடக்கும் போது மட்டும், பகுதி கிரகணத்தை காணலாம்.
இந்த கிரகணத்திற்குப் பின், நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இதை ரத்த நிலா என்றழைக்கிறோம். பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக இது ஏற்படுகிறது. அடுத்த சந்திர கிரகணம், 2022, மே 16ல் நிகழ உள்ளது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், அதே ஆண்டு, நவ., 8ல் நிகழும் சந்திர கிரணத்தை இந்தியாவில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.