50 ஆண்டுகளாக சேகரித்த தங்கத்தை மருத்துவ கட்டமைப்புக்கு செலவிடும் குருத்வாரா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2021 04:05
நந்தேத்: மஹாராஷ்டிரா மாநிலம் நந்தேத் நகரில் உள்ள பிரபல ஹசூர் சாஹிப் குருத்வாரா, 50 ஆண்டுகளாக சேகரித்த தங்கத்தை அப்பகுதியின் மருத்துவ கட்டமைப்புக்கு செலவிடப்போவதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு தாக்கிய போதே குருத்வாராக்கள் இலவச உணவு, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் போன்ற வசதிகளை அளித்தன. இரண்டாம் அலை பாதிப்பால் இந்தியா திணறிய போது தங்களால் முடிந்த அளவு ஆக்சிஜன் வசதிகளை இலவசமாக ஏற்படுத்தி தந்தன. பஞ்சாப் ரூப்நகரில் உள்ள பாத் சாஹிப் குருத்வாரா தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குருத்வாராக்களின் இச்சேவைகளை பாராட்டியுள்ளார். இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் நந்தேத் மாவட்டத்தில் ஹசூர் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இது, நாட்டின் 5 முக்கிய குருத்வாராக்களில் ஒன்றாகும். இக்குருத்வாரா கமிட்டியினர் தங்கள் மாவட்ட மக்கள் கொரோனா மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் மற்றும் மும்பைக்கு செல்ல வேண்டியிருப்பதை அறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 50 ஆண்டுகளாக குருத்வாராவில் சேர்ந்த தங்கத்தை மருத்துவ கட்டமைப்புக்கு செலவிட உள்ளதாக கூறியுள்ளனர். தாங்கள் நிறைய தங்கத்தை கட்டிடங்களிலும், குருத்வாராக்களிலும் போட்டோம். தற்போது அதை மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரிக்கு செலவிட உள்ளோம் என அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.