பதிவு செய்த நாள்
25
மே
2021
06:05
சென்னை : பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், கோவில்கள் தொடர்பான தங்களின் கோரிக்கைகளை பதிவு செய்ய வசதியாக, கோரிக்கைகளை பதிவிடுக என்ற, புதிய இணையவழி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதில், பதிவாகும் கோரிக்கைகள் மீது, 60 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் செயல்பாடுகள், வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டடங்கள் போன்றவற்றின் குத்தகை, வாடகை தொகை உள்ளிட்டவை தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன.மேலும் கோவில் திருப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் குறித்து, பக்தர்களும், பொதுமக்களும் பல கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
பக்தர்களின் கோரிக்கைகளை பதிவு செய்திடும் வகையில், கோரிக்கைகளை பதிவிடுக எனும் திட்டம், அறநிலைய துறை இணையதளமான, hrce.tn.gov.inல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். புகார் மனுக்களை, மொபைல் போன் எண்ணுடன் பதிவேற்றம் செய்யலாம்.கோரிக்கை மனுக்கான ஒப்புகை அட்டை அனுப்பப்படும். கோரிக்கை மனுக்கள் கமிஷனருக்கு அனுப்பப்பட்டு, அவரது நேரடி கண்காணிப்பில் இருக்கும்.மேலும், கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், என்னால் விரிவாக ஆய்வு செய்யப்படும். கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட, 60 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் விபரங்களை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.