இன்றைய காலத்தில் கஷ்டப்படுவோரில் பலர் அதில் இருந்து மீள்வது பற்றி சிந்திக்காமல் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கஷ்டம் தாண்டவமாடியது. மதுவுக்கு அடிமையாகிய குடும்பத்தலைவன் தரும் தொந்தரவே அவர்களுக்கு பெரும்பிரச்னையாக இருந்தது. இப்படி குடும்பம் வருமானமே இல்லாமல் கடனில் தத்தளித்தது. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து தரக்குறைவாக பேசிவிட்டு சென்றார். இதைத் தாங்க முடியாத குடும்பத்தலைவி மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண், ‘‘இது என்ன கோழைத்தனம்! கஷ்டம் வந்தால் போராட வேண்டும். நான் கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளை வளர்க்க வீடுகளில் பாத்திரம் தேய்க்கிறேன். கிடைப்பதைக் கொண்டு சாப்பிடுகிறேன். என்றேனும் ஆறுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் உழைக்கிறேன். உங்கள் கஷ்டத்தை ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள்! உன் கணவன் உழைக்காவிட்டால் என்ன... நீ உழைத்து குடும்பத்தை காப்பாற்று. நான் வேலைபார்க்கும் இடத்தில் வேலை செய்ய ஆள் தேவைப்படுகிறது. என்னோடு வா... சேர்ந்தே வேலைக்கு பேவோம். குறைந்த வருமானத்தில் காலம் கழிக்க பழகுங்கள். நிச்சயம் ஒருநாள் உனது வாழ்க்கை மாறும். நம்பிக்கையோடு காத்திரு.’’ என்றாள். இன்பமும், துன்பமும் ஆண்டவரால் தரப்படுபவை தான். அவற்றை ஏற்று துன்பம் குறைய அவரை ஜெபிக்க வேண்டும். அவர் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நம்பிக்கை அவசியம் வேண்டும் நாம் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். நம்பிக்கையின்றி செய்யும் செயல் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்து விடுகிறது. நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்... லட்சியம் நிச்சயம் ஒருநாள் வெல்லும்.