பதிவு செய்த நாள்
28
மே
2021
07:05
காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக இருந்தார் காஞ்சி மகாபெரியவர். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று ஆன்மிகம் பரப்பிய அருளாளர். தவவாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கை கிராமத்தில் இவரது நினைவாக மணிமண்டபம் உள்ளது. மே 26ல் மகாபெரியவரின் பிறந்தநாள் வருவதையொட்டி, இத்தலத்தை தரிசிப்போம்.
திருமழிசையாழ்வாரின் சீடர் கணிகண்ணன். இவர் ஒருமுறை காஞ்சிபுரம் மன்னரால் நாடு கடத்தப்பட்டார். சீடரை விட்டுப் பிரிய விரும்பாத குருநாதரும் உடன் கிளம்பினார். அன்புக்குரிய பக்தர்களான திருமழிசையாழ்வார், கணிகண்ணனை பிரிய மனமில்லாமல், அங்கு கோயில் கொண்டிருந்த பெருமாளும் புறப்பட்டார். மூவரும் ஓரிரவு முழுவதும் தங்கிய இடமே ‘ஓரிருக்கை’ (ஓர் இரவு இருக்கை). இச்சொல் மருவி ‘ஓரிக்கை’ ஆகிவிட்டது. பெருமாள் ஊரை விட்டுச் சென்றதை அறிந்த மன்னன் அதிர்ச்சியில் ஆழ்ந்தான். மன்னிப்பு கேட்டு மீண்டும் மூவரையும் இருப்பிடத்திற்கு வரவழைத்தான். இப்படி தன் பக்தர்களை விட்டுக் கொடுக்காத பெருமாள் அருள்புரியும் தலமான இங்கு, காஞ்சி மகாபெரியவர் தன்னுடைய சீடர்களுடன் 1955ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்து குரு, சீடர் உறவிற்குப் பெருமை சேர்த்தார்.
பெரியவர் மீது பக்தி கொண்ட பக்தர்கள் அவரின் நினைவாக, ஓரிக்கையில் மணிமண்டபம் எழுப்பினர். 100 அடி உயர விமானம், நுாற்றுக்கால், பாதுகா மற்றும் ருத்ராட்ச மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியவை இங்குள்ளன. 150 அடி நீளம், 52 அடி அகலம் கொண்ட இம்மண்டபம் இரண்டு ஏக்கர் பரப்பு கொண்டது. தஞ்சை பெரியகோயில் போல, முழுவதும் கருங்கல்லால் அமைக்கப்பட்டது. சிமென்டோ, கம்பியோ இங்கு பயன்படுத்தப்படவில்லை. சுண்ணாம்பு, கரும்புச்சாறு கலவையால் கற்கள் இணைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள
கல்யானைகள், கல்சங்கிலிகள் சிற்ப வேலைப்பாட்டின் பெருமையை பறைசாற்றுகின்றன.
மண்டபத்தின் மேல்பகுதியில் 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. 12 கல் வளையங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. காஞ்சி மகாபெரியவர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் பளிங்குக் கல்லால் ஆனது. கூரைப்பகுதி ருத்ராட்சத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோபுர விமானம் 80 டன் எடை கொண்டது. விமானம் 16 துண்டுகளாகச் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வாசலில் பெரிய சிங்கம் உள்ளது. அதன் வாயில் ‘உருண்டைக்கல்’ இருக்கிறது.
மகாபெரியவர் நுாறு ஆண்டுகள் வாழ்ந்ததால், மண்டபத்தில் நுாறு துாண்கள் உள்ளன. கோபுரத்தில் சிலைகள் வடிக்கப்படவில்லை. சன்னதியின் முன் பெரிய நந்தி சிலை உள்ளது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட இக்கோயிலில் ஆதிசங்கரர் தன் சீடர்களுடன் காட்சி தருகிறார். முகப்பு வாயிலில் இருசக்கரங்கள் உள்ளன. சிவபெருமான் நடனமாடும் பிரதோஷ தாண்டவ சிற்பம், பக்தர்கள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
எப்படி செல்வது : காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் 5 கி.மீ.,