மண்டைக்காடு கோயில் தீ விபத்து விரைந்து செயல்பட்ட வீரர்களுக்கு பரிசு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2021 04:06
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ம ண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிவதாக சுமார் 7:03 மணிக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஜெகன், துரை ராபின், கணே ஷ், இசக் கி ஆகியோர்களுடன் முதல் குழு 4.700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு கோயிலுக்கு ஐந்து நிமிடத்திற்குள் சென்று, எரிந்து கொண்டிருந்த கோயிலின் மேற்கூரையில் உள்ள தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் மூல கருவறையில் புற்றினால் ஆன அம்பாள், பிற சிலைகள் எவ்வித சேதமும் இன்றி காப்பாற்றப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் தாமதித்து இருந்தாலும் மேற்கூரை இடிந்து விழுந்து கருவறையில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். குளச்சல் தீயணைப்பு படையினரின் இத்தகைய துரித செயலை பாராட்டி நேற்று ஆய்வு மேற்கொள்ள வந்த தீயணைப்பு துறையின் தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் மேற்கண்ட பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வீதம் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட அலுவலர் சரவணபாபு உடனிருந்தார்.