மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைக்கப்படும்: அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2021 01:06
மணவாளக்குறிச்சி: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமானது. இதையடுத்து கோயிலில் நிரந்தர மேற்கூரை அமைக்கும் பணிக்கு இரும்பு தூண்கள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் கோயிலில் தீ பிடித்து எரிந்த பகுதியை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர் பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே .சே கர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: மண்டைக்காட்டில் புற்று வடிவிலான பகவதியம்மன் கோயில் மேற்கூரை கடந்த 2ம்தேதி தீப்பிடித்து எரிந்த தகவல் முதல்வர் கவனத்திற்கு வந்ததும், உடனே அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி வைத்து ஆய்வு செய்ய கூறினார். அப்போது கட்சி பாகுபாடில்லாமல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விரைந்து வந்து பார்வையிட்டனர். இது பற்றி ஆய்வு செய்ய என்னையும் முதல்வர் அனுப்பிவைத்துள்ளார். இது சக்தி வாய்ந்த கோயில். சன்னிதானத்தில் அம்மனுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இங்கு வந்த உடனே அம்மனின் சக்தி என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. பக்தர்களின் மனம் புண்படாமல் இந்து அறநிலையத்துறை வெளிப்படையாக செயல்பட முதல்வர் கூறியுள்ளார். கோயில் சீரமைப்பு பணி பழமை மாறாமல், ஆகம விதிகளுடன் புனரமைக்கப்படும். போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் படிகோயிலை பாதுகாக்க புனரமைப்பு பணி நடக்கும். அனை வரும் பாராட்டும் வகையில் பணி செய்து முடிக்கப்படும். அதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். கோயில் மேற்கூரையை தங்கத்தால் வேய வேண்டும் என மாநில பா.ஜ., தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். பக்தர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பணி முடிக்கப்படும். தீ விபத்து குறித்து கண்டறிய கலெக்டர் உள்பட 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 8பேரிடம் விசாரணை நடந்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை கலெக்டர் முதல்வருக்கு அனுப்பி வைத்த பின்பு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.