பதிவு செய்த நாள்
06
ஜூன்
2021
11:06
சென்னை: கொரோனா நோய் தொற்றில் இருந்து மீளவும், உலக நன்மைக்காகவும், இணைய தளம் வாயிலாக கோடி ஹரே ராம நாம ஜபம் நடந்து வருகிறது.
மஹா மந்திர கலி தோஷ நிவாரண ஜபமானது, சங்கராச்சாரியார்கள், பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் ஆகியோர் ஆசியுடன், மே 28 முதல் ஆன்-லைன் ஜூம் வாயிலாக, கடையநல்லுார் ராஜகோபால் தாஸ் பாகவதர் முயற்சியில், கிருஷ்ண குடும்பத்தார்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஜபத்தில், இரு மடங்களின் ஆச்சார்ய சுவாமிகளும் வீடியோ வாயிலாக பங்கேற்று, நாம மஹிமைகள் குறித்து அருளாசி வழங்கினர். கோடி ஹரே ராம நாப ஜபம் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. புதுக்கோட்டை கோபால கிருஷ்ண, சங்சீவி பாகவதர் பரம்பரையில் வந்த, மதுரை ராமானந்த சரஸ்வதி சுவாமிகளும், பாகவதர்களும் தினசரி பங்கேற்று நாம மகிமை உரை நிகழ்த்தி, ராம ஜபத்தை துவக்கி வைக்கின்றனர். இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆன்-லைன் வாயிலாக ஜபித்து, கொரோனா தொற்றில் இருந்து உலக நலம் பெற பிரார்த்தித்து வருகின்றனர்.வார நாட்களில் தினமும் காலை 6:00 முதல் 7:30 மணி வரை; சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் இடைவெளி விட்டு இரவு 8:30 மணி வரை மஹா மந்திர நாம ஜபம் நடக்கிறது. இந்த புண்ணிய நிகழ்ச்சியில் பங்கேற்க, http://www.krishnakudumbam.in என்ற இணைய தளத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்பவர்களுக்கு ஜூம் இணைப்பு மின்னஞ்சல் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பப் படுகிறது.