பதிவு செய்த நாள்
07
ஜூன்
2021
06:06
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், சத்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில், நோய் தொற்று பாதித்து, வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு, மதிய உணவு சப்ளை செய்கின்றனர். மேட்டுப்பாளையம் குட்டையூர் அருகே மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில், சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலை சத்குரு சாய் சேவா சங்கம் அறக்கட்டளையினர் நிர்வாகம் செய்து வருகின்றனர். இச்சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும், இலவச உணவு வழங்கி வந்தனர். கொரோனா பிரச்னையால் உணவு பொட்டலங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் வைரஸ் நோய் தொற்று தாக்கி, வீடுகளில் தனிமை படுத்தியவர்களுக்கு, சத்குரு சாய் சேவா சங்கம் மதிய உணவு வழங்கும் பணியை துவக்கி உள்ளது. இதுகுறித்து சேவா சங்கத்தின் நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், சுதர்சன் ஆகியோர் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கும், நோய் தொற்றால், வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கும், மதியம் உணவு வழங்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. எனவே மதிய உணவு தேவைப்படுவோர் முதல் நாளே தகவல் தெரிவித்தால், தேவையான உணவுகளை சமைத்து, அவர்களின் வீடுகளுக்கு, வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உணவு பாக்கெட்டுகள், வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன. காரமடை பகுதியில் உணவு பாக்கெட் தேவைப்படுவோர், வந்து வாங்கிச் செல்ல அழைக்கப்படுகின்றனர். சத்குரு சாயி சேவா சங்கம் அறக்கட்டளை சார்பில் இன்று (நேற்று) 200 பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் எவ்வளவு பேருக்கு தேவைப்படுகிறது என்ற தகவல் தெரிவித்தால், அனைவருக்கும் உணவு தயார் செய்து சப்ளை செய்யப்படும். எனவே மதிய உணவு தேவைப்படுவோர், 98422 08807, 94431 64933 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.