மதுரை : திருநெல்வேலி பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயில் சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி கூனியூர் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், வணிக வளாகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.கோயிலுக்குச் சொந்தமான வீடுகளில் வசிப்போர் வாடகை செலுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அலுவலர்கள் கடமை தவறிவிட்டனர். கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடகை, விவசாய நிலத்திற்குரிய குத்தகை நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுந்தரவேல் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: ஆக்கிரமிப்பாளர்கள் யார், யார் என்பதை மனுதாரர் குறிப்பிடவில்லை. அறநிலையத்துறை திருநெல்வேலி இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் பரிசீலித்து, ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருக்கும்பட்சத்தில் 4 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.