பதிவு செய்த நாள்
16
ஜூன்
2021
09:06
ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் கும்பமேளாவின்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் போலி என தெரிய வந்துள்ளது.
விசாரணை: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், கங்கை ஆற்றில் சமீபத்தில் கும்பமேளா நடந்தது. விழா நடந்த பகுதி களில் கொரோனா சோதனை மேற்கொள்வதற்காக, 24 தனியார் ஆய்வகங்கள் பணியமர்த்தப்பட்டன. இவற்றில், 14 ஆய்வகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், 10 ஆய்வகங்கள் கும்பமேளா நிர்வாகம் சார்பிலும் நியமிக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்தது. இந்த குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என, போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரே மொபைல் போன் எண்ணில், 50க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உண்மை நிலவரம்: ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா பரிசோதனை கருவி வாயிலாக, 700 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. எந்த விபரமும் இல்லாமல், போலியான முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஹரித்வாரில் கதவு எண், 5 என்ற முகவரியில் மட்டும், 530 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. ஹரித்வாரில் மாதிரி எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களில், 200 பேர் மாணவர்கள் மற்றும் தகவல் பதிவு ஊழியர்கள். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மாதிரி எடுப்பவர்கள், பரிசோதனை மையத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த 200 பேரில் ஒருவர் கூட ஹரித்வாருக்கு வரவேயில்லை. இவ்வாறு அதில் தெரிய வந்துள்ளது. உத்தரகண்ட் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், முழுமையான விசாரணைக்கு பின் தான், உண்மை நிலவரம் முழுமையாக தெரியும் என்றனர்.