பதிவு செய்த நாள்
16
ஜூன்
2021
06:06
சென்னை :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள, தொண்டு நிறுவன பள்ளி, இனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும், என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் நிலம், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ளது.
தீர்ப்பு: இதில், தனியார் தொண்டு நிறுவனம் வசமிருந்த 32 கிரவுண்டில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை, அறநிலையத்துறை சுவாதீனமாக பெற்றது.அப்பள்ளி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நேற்று கொண்டு வரப்பட்டது. பள்ளியை பார்வையிட்ட, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், குத்தகை அடிப்படையில் கலவலக் கண்ணன் செட்டி தொண்டு நிறுவனம் சார்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது.அதன் குத்தகை காலம் முடிந்ததால், இணை கமிஷனர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு, 78ன் கீழ், சுவாதீன உத்தரவு பெறப்பட்டது.
அதை எதிர்த்து, தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.அங்குள்ள பள்ளியை, அவர்களால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அங்கு 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 57 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியின் நிலை குறித்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர், அறநிலையத்துறையே பள்ளியை ஏற்று நடத்தும் என, உத்தரவு பிறப்பித்தார்.கடந்த ஆண்டுகளில், இப்பள்ளி எப்படி செயல்பட்டதோ, அதேபோல செயல்படும். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.
மூன்று ஆண்டு: அதற்கான பணிகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளன. பள்ளி செயல்பாட்டிற்கான அனைத்து செலவையும், அறநிலையத்துறை ஏற்கும். ஹிந்து சமய அறநிலையத் துறையில், மூன்று ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 35 நாட்களில் செய்து முடித்து உள்ளோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், காஞ்சி புரம் மண்டல இணைக் கமிஷனர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.