பதிவு செய்த நாள்
16
ஜூன்
2021
06:06
சென்னை:ஹிந்து சமய அறநிலைய துறையின் இணையதளத்தில், கோவில்களை நிறுவனங்களாக மாற்றிய பதிவேற்றம் அதிரடியாக அகற்றப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அறநிலைய துறையின் பல்வேறு செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. அறநிலைய துறை நிர்வாகம் அனைத்தும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் இணையதளத்திலும், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.சொத்து விபரங்கள், பக்தர்கள் புகார் பதிவிடும்பகுதி உள்ளிட்ட புதிய தகவல்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம், இணையதள பதிவில் நிர்வாகம் என்ற பிரிவில், கோவில்களை நிறுவனங்களாக கருதி பதிவிடப்பட்டிருந்தது.இது, ஆன்மிகவாதிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து நம் நாளிதழில்,செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அறநிலைய துறை இணையதளத்தில், கோவில்களை நிறுவனங்களாக மாற்றிய பதிவேற்றம் அதிரடியாக அகற்றப்பட்டது.