புதுச்சேரி: கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என கண்டறிய, பரிசோதனைக்காக தும்பிக்கை சளி மற்றும் இதர மாதிரி நீர் சேகரிக்கப்பட்டது. புதுச்சேரி வனக்காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுகவள்ளி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கால்நடை துறை இயக்குநர் செல்வராஜ் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில், மாதிரி சேகரிக்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி பிரணாம்பிகாவுக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட மாதிரிகள் , உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.