திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முதல், வரும் 18ம் தேதி வரை குறைந்த ஊழியர்களுடன் உண்டியல் திறந்து எண்ணும் பணி துவங்கியது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஏப்.20ம் தேதி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், தினசரி நடைபெறும் நித்ய பூஜைகள் மற்றும் கோவில் குருக்கள் மற்றும் மூன்று ஊழியர் களுடன் நடந்து வருகிறது.இந்நிலையில், ஏப்.19ம் தேதி வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கொரோனா தொற்று மற்றும் முழு ஊரடங்கால் உண்டியல் வசூல் எண்ணாமல் இருந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ளதால், 30 ஊழியர்களுடன் உண்டியல் திறந்து எண்ணுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணி நேற்று முதல் துவங்கியது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. வரும் 18ம் தேதி வரை உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.