திருச்சி: கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக, நேற்று காலை அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் துறையின் ஆணையர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஐந்து கோவில்களுக்கு ரோப்கார் வசதி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, சோளிங்கர் நரசிம்மர் கோவில், திருநீர்மலை கோவில், திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்களுக்கு ரோப்கார் வசதி செய்துதர சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கோவில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்களில் கடைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு, நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.