பதிவு செய்த நாள்
19
ஜூன்
2021
11:06
திருநீர்மலை: திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவிலில், பக்தர்களுக்காக, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற, பிரசித்தி பெற்ற, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நடவடிக்கைசனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில், கட்டுக் கடங்காத கூட்டம் காணப்படும்.கீழே இருந்து, மலைக்கோவிலுக்கு செல்ல, 288 படிக்கட்டுகள் உள்ளன. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால், மலைக்கோவிலுக்கு செல்ல முடியவில்லை.இதனால், பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் வரை, வாகனங்கள் செல்லும் வகையில், சாலை அமைக்க வேண்டும் என்றும், ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், நேற்று மாலை, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இங்கு ஆய்வு செய்தனர்.பாதுகாப்புபின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தோம். சிதிலமடைந்துள்ள, 13 குடியிருப்புகளை புனரமைக்கவும், படிக்கட்டுகளில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஒரு அங்குலம் கூட, தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வகையில், பாதுகாப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.